சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.

 


சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்"  சிறப்பு திட்ட முகாமானது, வருகின்ற ஜூலை 18 ஆம் தேதியன்று காரைக்குடி மாநகராட்சி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, எஸ்.புதூர், கல்லல்  ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில்  நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்பு திட்ட முகாமானமது, சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2025 வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள்    நடைபெறவுள்ளது. 


அதன்படி வருகின்ற ஜூலை 18ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் : 1,2,3 ஆகிய பகுதிகளுக்கென கழனிவாசல் முத்துகிருஷ்ணா மஹாலிலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென இடைக்காட்டூர் ஊராட்சியிலுள்ள சமுதாயக்கூடத்திலும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென சோழபுரம் ஊராட்சியிலுள்ள மீனா திருமண மண்டபத்திலும், தேவகோட்டை  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென சிறுமருதூர் ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென எஸ்.புதூர் ஊராட்சியிலுள்ள சமுதாயக் கூடத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென குன்றக்குடி ஊராட்சியிலுள்ள வெள்ளாளர் சமுதாயக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது நடைபெறவுள்ளது.


மேலும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களின் வாயிலாக, நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அந்தந்த துறைகளால் சேவைகள் வழங்கப்படும். அதில் நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 13 துறைகளின் மூலமாக 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.


இதில் சொத்துவரி, குடிநீர் வசதி உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு,  பிறப்பு  இறப்பு சான்றிதழ்கள், காலி மனைவரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவைகள் நகர்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.   


மேலும் பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளும் இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். 


எனவே இம்முகாமினை முறையாக பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடைபெறும் நாளன்று, உரிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்                                         திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad