தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் முழுநிறைவு பெற்றுள்ள மருத்துவர் பார்வதி, 80 வயதிலும் தினமும் தன்னலமின்றி மருத்துவம் செய்து வருகிறார். ஏழை எளியோருக்காக இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சேவை செய்யும் அவர், வீடு இல்லாத நிலையில் இன்று வரை வாடகை வீட்டிலேயே தங்கி அந்த இடத்திலேயே தனது மருத்துவ சேவையை தொடர்ந்து ஆற்றி வருகிறார்.
அவரது சேவையை மக்கள் உணர்வுபூர்வமாக மதித்து, "அம்மா" என அழைக்கின்றனர். மருத்துவர் தினத்தையொட்டி, திருவாரூரிலிருந்து இன்னர் வீல் சங்கம் மற்றும் பொறையார் லயன்ஸ் கிளப் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அவரது இல்லத்திற்கு நேரில் வந்த சமூக சேவையாளர்கள், பார்வதிக்கு கேடயம், மணிமாலை, கிரீடம், சால்வை உள்ளிட்ட பல மரியாதைகள் செய்து கௌரவித்தனர்.
அவரது மருத்துவ சேவையை நினைவுகூர்ந்த பலர் பேசும் போது ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து, அவரை கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினர். மேலும், “இவரைப் போல மருத்துவத்தை பணியாக அல்ல, சேவையாக பார்க்கும் எண்ணத்துடன் மற்ற மருத்துவர்களும் செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக