சிவகங்கை மாவட்டம் பள்ளத்துப்பட்டி அய்யனார் கோயில் தொடர்பான எட்டு செப்பேடுகள் ஆய்வு.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துப்பட்டி அய்யனார் கோவில் தொடர்பான செப்பேடுகள் ஆய்வு வேந்தன்பட்டியைச் சேர்ந்த செம்பன் என்பவரிடம் எட்டு செப்பேடுகள் இருப்பதாக வேந்தன்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர் பாலசுப்ரமணியன் தந்த தகவலையடுத்து அங்கு சென்று அந்த எட்டு செப்பேடுகளையும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டைத் தொல்லியல் கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இவற்றில் ஆறு செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ள சாலிவாகன சகாப்த ஆண்டும்,தமிழ் ஆண்டுகளும் பொருந்தி வராமல் இருந்தாலும் எழுத்தமைதியைக் கொண்டு இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என அறிய முடிகிறது.
இச்செப்பேட்டில்புறமலை சூழ்ந்த பொன்னமராவதி நாட்டில் ஐந்து நிலை நாட்டின் மங்கலக்கோட்டையின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குக் கோட்டையின் காவலர்களாக இருந்த பூத முத்திரி, சூர முத்திரி, மன்ன முந்திரி மற்றும் தொண்டுகாடன் முத்திரி,சோலைக் கூத்தன் முத்திரி, முத்துராச முத்திரி போன்றோர் இருந்துள்ளனர் என்றும், இப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில், அழகிய நாயகி அம்மன் கோவில், அய்யனார் கோவில் திரவியங்களான வெள்ளி, வெண்கலப் பொருட்களைப் பாதுகாத்து காவல் காத்தமைக்காகவும், கோட்டை காவல் இருந்ததைக்காவும், கொடுக்கப்பட்ட பணி செய்ததற்குரிய மானிய நிலமான உம்பளமாக ஏனாதிக் கம்மாய் பெரிய மடைப் போக்கில் ஆறு செய் நிலம் மன்ன முத்திரி, சூர முத்திரி, பூத முத்திரி ஆகியோருக்கு வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. மேலும் அழகிய நாயகி அம்மன் கோயிலில் மாலை மரியாதை வழங்குவதைப் பற்றியும் கூறுகிறது. செப்பேட்டில் காணப்படும் முத்திரி என்பது முத்தரையரைக் குறிக்கும் சொல்லாகும்.
அதுபோல வேடன் சிலுகன் என்பவனுக்கு அழகிய நாயகி அம்மன் கோயில் மரியாதை, பெரிய குளம், அடிமடை பாய்ச்சல் ஆகியவற்றை விட்டுக் கொடுத்தும், அஞ்சலை நாடுகளில் மங்கலக்கோட்டையின் வடபுறத்தை வேடன் சிலுகன் என்பவருக்கு பலிக்காணியாக வீரகாங்கயன் விட்டுக் கொடுத்த செய்தியையும் கூறுகிறது.
இங்கு உள்ள செப்பேடுகளில் கொடுத்தவர் கையொப்பமாக மங்கலக்கோட்டை மளுவராயன், வீர காங்கயன், தொறாக் குயிலன், வெள்ளையன், பெரிய மெய்யன், சின்ன மெய்யன் மற்றும் வல்லம்பத்தேவர், ஆகக் கொண்டான், சின்ன தேவர், பெரியதேவர் ஆகியோர் பெயர்களும் மேகராச பாண்டியன் என்பவரது பெயரும் காணப்படுகின்றன.
இச்செப்பேடுகளை எழுதிய ஆசாரிகளாக நலன் ஆசாரி மற்றும் பெருமாள் ஆசாரி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் செப்பேடுகளில் பூலாங்குறிச்சி, காஞ்சிரங்குறிச்சி, ஆவாம்பட்டி, மனக்குடி பண்ணை, கீழ் குறிச்சி போன்ற ஊர்களின் பெயர்களும், அழகிய நாயகி அம்மன், அடைக்கலங்காத்த அய்யனார், பரியா மருது அய்யனார், ஆத்திக்காட்டு அய்யனார், குறுந்தடிக் கருப்பர், தச்சன் கருப்பர் ஆகிய தெய்வங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் முன்னோர் மரபை விளக்கும் மெய்க்கீர்த்தி இச்செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சூர முத்திரி என்பவரின் நினைவாக வேந்தன்பட்டியில் ஒரு பகுதி சூரன் கோடங்கி வளவு என்று இன்றுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக