தாராபுரம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கொலை கூலிப்படையினருடன் தனியார் பள்ளி தாளாளர் சரண் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

தாராபுரம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கொலை கூலிப்படையினருடன் தனியார் பள்ளி தாளாளர் சரண்



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன் விரோதம் காரணமாக பள்ளி வளாகம் அருகே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கூலிப்படையினருடன் தனியார் பள்ளி தாளாளர் போலீஸில் சரணடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி. இவரது மகன் முருகானந்தம்(45), சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.


லிங்கசாமிக்கும், அவரது தம்பியான தண்டபாணி(60) என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.15 ஆண்டுகளுக்கு முன் கூலிப்படையினரால் லிங்கசாமி வெட்டி கொலைசெய்யப்பட்டார். இக்கொலைக்கான நேரடி சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், தனது தந்தையின் கொலைக்கு காரணமான சித்தப்பாவை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வழக்கறிஞர் முருகானந்தம் முடிவுசெய்தார். இந்நிலையில், தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டுவரும் தண்டபாணிக்கு சொந்தமான தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கட்டிடம் பள்ளிக் கல்வித் துறை அனுமதித்த அளவைவிட, 4 மாடிகள் கட்டப்பட்டு செயல்படுவதால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என கூறி, முருகானந்தம் தனது சித்தப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளியின் 4-வது மாடி கடந்த மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி செயல்பட்டு வரும் கட்டிடம் முழுவதுமே முறை கேடாக கட்டப்பட்டுள்ளது என்றும், கட்டிடத்தில் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதை பரிசீலனை செய்து பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அகற்ற முருகானந்தம் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, பள்ளியின் உறுதித்தன்மையை பார்வையிட நீதிமன்ற ஊழியர்களுடன் முருகானந்தமும் பள்ளிக்கு நேற்று வந்துள்ளார்.அப்போது, மறைந்திருந்த கூலிப்படையினர் 4 பேர் வழக்கறிஞர் முருகானந்தத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.இதனைக் கண்டதும் உடன் வந்த நீதிமன்ற ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தாராபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையினர் 4 பேர் தாராபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad