உலகிலேயே நீலகிரியில் மட்டுமே பரவி கிடக்கும் ஊசிக்கலா பழச்செடிகள்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான தாவர இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். முன்பு ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பரவி கிடந்த குறிஞ்சி செடிகள் உள்ளூர் மக்கள் மொழியில் கட்டைச் செடி என அழைக்கப்பட்டது. தற்போது அவை நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள எப் பநாடு போன்ற வனப்பகுதிகளில் தான் காண முடிகிறது. அதுபோல பல தாவர இனங்கள் அழிந்து போய்விட்டன என்றே கூறலாம். அவற்றில் ஒன்றுதான் ஊசிக்கலா என்ற தாவரமாகும். இதன் தாவர இயற் பெயர் பெர் பெரிஸ் நீலகிரி நிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த தாவரம் மூன்று வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையான இந்த தாவரம் நீலகிரியில் மட்டும் தான் உள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பழங்கள் வயலட் கலரில் காணப்படும். சுவை மிக்க இந்த பழங்களை கிராமப்புறத்தில் வசிக்கும் குழந்தைகள் ஆசையுடன் பறித்து சாப்பிடுவார்கள். கரடி போன்ற வனவிலங்குகளுக்கும் இந்த பழம் மிகவும் பிடித்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தாவரம் அழியும் நிலையில் உள்ளது என்பது வருந்தத்தக்கதாகும். கோத்தகிரி பகுதியில் உள்ள கேர்க்கம்பை அருகில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே இந்தத் தாவரம் பரவலாக காணப்படுகிறது. இந்த அரசு நிலம் பல வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் சிமெண்ட் கம்பெனிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அதனை பயன்படுத்தாமல் வைத்திருந்ததால் வருவாய்த்துறை திரும்பப் பெற்றது . அந்த இடத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும் கால்நடை மருத்துவ மனையும் அமைந்துள்ளது. மீதமுள்ள இடத்தில் இந்தச் செடிகள் பரவலாக காணப்படுகிறது. இந்த தாவர இனத்தை பாதுகாக்கும் வகையில் அந்த இடத்தில் மீதமுள்ள பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதன் பயனாக அந்த தாவர இன வகைகள் பாதுகாக்கப்படும். இதுபோல அழியும் தருவாயில் உள்ள தாவர இனங்கள் அனைத்தையும் கண்டறியப்பட்டு அவைகள் பரவி உள்ள நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்ட நிலப் பகுதிகளாக அறிவித்தால் நீலகிரி மாவட்டத்தின் பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்படும். இது போன்ற ஏராளமான தாவர இனங்களும் விலங்கினங்களும் நீலகிரி என்ற ஒரு குறுகிய பகுதியில் வாழ்ந்து வருவதால் தான் நீலகிரியை இந்தியாவின் முதல் உயிர் சூழல் மண்டலம் என இந்திய அரசு அறிவித்தது. மத்திய அரசும் தமிழக அரசும் நீலகிரியின் பல்லுயிர் சூழலை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு.கே .ஜே . ராஜு அவர்கள் கூறுகிறார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக