திருநெல்வேலி, ஜூலை 3, 2025: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் பாரம்பரியமிக்க ஆனித் தேரோட்டப் பெருவிழா வரும் ஜூலை 8-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இன்று மாலை தேரோட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. சுகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
தேரோட்ட நிகழ்வை வெகு சிறப்பாக நடத்த அரசு சார்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புற மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. தேரோட்டத்தில் பெருவாரியான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக 100 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. தேரோட்டத்தின் நான்கு ரத வீதிகளிலும் எட்டு இடங்களில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
தேரோட்டம் நடைபெறும் நேரம் முழுதும் அனைவருக்கும் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வயதானவர்கள் சிரமமின்றி தேரோட்டத்தைப் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களையும் சிரமமின்றி நிறுத்துவதற்காக 20 இடங்களில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டத்தின் போது எந்தவித அசவுகரியமும் ஏற்படாத வண்ணம், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தேரோட்டம் தொடங்கியது முதல் நிலைக்கு வர குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஆகும் என்பதால், நான்கு ரத வீதிகளிலும் சிறப்பு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத விதமாக மின்சார விநியோகம் தடைபட்டால் உடனடியாக வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக 50 ஆபத்துக்கால விளக்குகளும் (Emergency Lights) அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தேரோட்ட வீதிகளின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு, பொதுமக்களுக்குத் தேவைப்படும் முதலுதவிகளைச் செய்வார்கள்.
அவசர உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்கள் ஐந்து இடங்களில் நிறுத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டால் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டால், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உடனடியாகக் கொண்டு செல்லப்படுவார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருட்டுப் போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல்துறை மூலம் நாள் முழுவதும் எச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்படும். மேலும், மக்களோடு மக்களாகக் காவலர்களும் சாதாரண உடையில் கலந்து இருப்பார்கள்.
தேரோட்டம் நடைபெறும் பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 85 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தொடர்ந்து கூட்ட நெரிசல் மற்றும் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணித்து, எந்தவித அசம்பாவிதங்களும் நேரிடாதவாறு சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது, திருநெல்வேலி மாநகரக் காவல்துறை துணை ஆணையாளர் டாக்டர் பிரசன்ன குமார் ஐபிஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக