அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்பி, டிஎஸ்பி மீது நடவடிக்கை, விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த், கண்ணன், பிரபு ஆகிய 5 காவலர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி உயர்திரு வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ் சிவகங்கை எஸ்.பி பொறுப்பை கூடுதலாக பொறுப்பாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்ந்து, இந்த உயிரிழப்பு வழக்கில் மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து மதுரை தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
இப்பொதுநல வழக்கை விசாரித்து வரும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உயர்திரு எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் உயர்திரு மரிய கிளீட் ஆகியோர் அமர்வு பிரேத பரிசோதனை அறிக்கையில் 44 இடங்களில் காயங்கள் உள்ளது, காவலாளி அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், கல்வி அறிவு மேம்பட்டுள்ள இந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் வியப்பாக உள்ளதாகவும், மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணையை தொடங்கவும் தெரிவித்துள்ள நீதிபதிகள் வழக்கு சம்பந்தமாக காவல்துறைக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
பொதுநல வழக்கு விசாரணையில் அனைத்து உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் இரண்டு நாட்களில் அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையானது தமிழக டிஜிபி திரு சங்கர் ஜிவால் அவர்கள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இன்று சமூக வலைத்தளங்களில் திருப்புவனத்தில் கைதான குற்றப்பிரிவு போலீசார் உயிரிழந்த அஜித்குமாரை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக