பட்டுக்கோட்டை அருகே சுமார் 237 கிலோ கஞ்சா பறிமுதல் ...இலங்கைக்கு கடத்த முயற்சியா என காவல்துறை விசாரணை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

பட்டுக்கோட்டை அருகே சுமார் 237 கிலோ கஞ்சா பறிமுதல் ...இலங்கைக்கு கடத்த முயற்சியா என காவல்துறை விசாரணை


பட்டுக்கோட்டை அருகே சுமார்  237 கிலோ கஞ்சா பறிமுதல் ...இலங்கைக்கு கடத்த முயற்சியா என காவல்துறை விசாரணை... 


பேராவூரணி, ஆக.6 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில்  திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் அலாவுதீன் தலைமையிலான காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை (TN-85 R 9758 ரெனால்ட் டிரிப்பர்) நிறுத்தி சோதனை இட்டனர். அந்த காரில், 237 கிலோ எடையுள்ள, 110 கஞ்சா பொட்டலங்கள், 7 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து கஞ்சா மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஜோதிங்கநல்லூர் சுந்தரம் என்பவர் மகன் சீனிவாச பெருமாள் (வயது 25) மற்றும் திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்தபுரம் ஆறுமுகம் மகன் முத்துமாலை (வயது 21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்த போது, சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலா என்ற நபர் இந்த மூட்டைகளை கொடுத்து அனுப்பியதாகவும், இதை  கட்டையங்காடு பகுதியில் வந்து ஒருவர் பெற்றுக் கொள்வார் எனவும் தெரிவித்தார். அதற்குள் காவல்துறையில் பிடிபட்டு விட்டோம் என தெரிவித்துள்ளனர். 


இந்த கஞ்சா மூட்டைகள் சென்னையில் இருந்து திருச்சி - புதுக்கோட்டை வழியாக பட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தி வரப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்த கஞ்சா மூட்டைகளை இங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 


இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 


பின்னர் கஞ்சா கடத்தி வந்த இருவரும்,  பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்துடன் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், வழக்குப் பதிவு செய்யப்பட்டு பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad