திருப்புத்தூரில் 79-வது சுதந்திர தினத்தில் 79 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி வரைந்து பள்ளி மாணவர்கள் சாதனை.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே தேரேந்தல்பட்டியில் அமைந்துள்ள எஸ்.கே.எஸ் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இதில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மூவர்ணத்தில் அசோக சக்கரத்துடன் 79 மீட்டர் (259 அடி) நீளமுள்ள தேசிய கொடி வரைந்து, மாணவர்கள் பூக்கள் தூவியும், வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும் உற்சாகமாக சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
மேலும் பசுமை புரட்சி (1965-1970), வெண்மை புரட்சி (1970-1996), நீல புரட்சி (1985-1990) ஆகிய புரட்சிகளை நினைவு கூர்ந்து வண்ண வண்ண கோலப்பொடிகளால் சித்திரம் வரைந்த மாணவர்கள், 2025 முதல் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு புரட்சி ஆரம்பித்து விட்டது, அப்புரட்சியானது முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்பதை மற்றவர்கள் அறியும் வண்ணம் அதற்கான சித்திரத்தை தெளிவாக வரைந்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 79 மீட்டர் நீள தேசியக்கொடி அருகில் நின்று மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் கைதட்டியும், சல்யூட் அடித்தும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ச்சியாக ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டு இந்திய தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை மாணவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக