திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி கன்னிவாடி பேரூராட்சி பகுதிகளில், அதிமுகவை சேர்ந்த மன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்த எந்தவித தகவலும் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், Amplus Solar எனப்படும் தனியார் நிறுவனம் துணை மின் நிலையம் அமைக்க ஆயத்தப் பணிகளை செய்து வருவதோடு, பேரூராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் First Energy எனப்படும் மற்றொரு தனியார் நிறுவனமும் துணை மின் நிலையம் அமைக்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த துணை மின் நிலையங்களால், பேரூராட்சி மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்றும், அமைக்கப்பட்டால் கிராம சாலைகளின் இருபுறங்களிலும் மின்கம்பங்களை நட்டு மின் பாதை அமைக்கப்படும் என்றும், இதனால் விவசாயிகள் விவசாய தேவைக்கான மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்கள் உருவாகும் என்றும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
மேலும், First Energy நிறுவனம் துணை மின் நிலையம் அமைக்கவுள்ள இடத்தில், பல வருடங்களாக இருந்து வந்த இயற்கை நீரோடை அழிக்கப்பட்டு அதன் மேல் நிலையம் அமைக்கப்படுவதும் உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தடையில்லா சான்று வழங்கக் கூடாது, மேலும் வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்த தகவல்களை அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் எனக் கோரி, நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தை அதிமுக சார்பில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் மணிவேல், ஆறாவது வார்டு கவுன்சிலர் செல்வி, பத்தாவது வார்டு கவுன்சிலர் செந்தில் ஆகியோர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக