வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், வைகை ஆற்றுப் பகுதியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் 29ஆம் தேதி வைகை ஆற்றில் மிதந்ததாக வரப்பெற்ற ஊடகச் செய்தியின் அடிப்படையில் திருப்புவனம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அம்மனுக்களை கைப்பற்றினர்.
அவை அனைத்தும் நகல் மனுக்கள் என்றும், மொத்த உள்ள 13 மனுக்களில் 6 மனுக்கள் ”உங்களுடன் ஸ்டாலின்” மனுக்கள் என்றும், மற்றவை இதர மனுக்கள் என்றும் கண்டறியப்பட்டது. மேற்கண்ட 6 மனுக்கள் பட்டா மாறுதல் மனுக்கள், அவை ஏற்கனவே இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்ட மனுக்கள் ஆகும். மேலும், இந்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டு குற்ற எண்.383/2025, u/s 305(a) BNS,2023-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை செய்ய சிவகங்கை வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை பணிமாறுதல் செய்தும், வட்ட அலுவலகத்தில் பணியில் அலட்சியமாக இருந்த ஏழு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள் குறித்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக