நாசரேத், ஆகஸ்ட் 21, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியர் இயக்க ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் மூன்று நாட்கள் திசையன்விளை விவி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. துவக்க நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வனிதா தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் சிதம்பரநாதன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சாரணர் இயக்க மாநில முதன்மைத் தேர்வாளர்கள் கிருஷ்ணன், ராஜகோபால், மஹபூப் கான் மற்றும் செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தினர். எழுத்துத் தேர்வு, கூடாரம் அமைத்தல் செய்முறை தேர்வு, கொடி பாடல், இறை வணக்கப் பாடல், சாரணர் இயக்கத்தின் விதிமுறைகள் குறித்த தேர்வுகள் நடத்தப்பட்டன.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாநில சாரண சாரணியர் இயக்க செயல் திட்ட ஆணையர் கோமதி மற்றும் மாநில பயிற்சி ஆணையர் தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதி நாளன்று நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் வனிதா தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். திருச்செந்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் பாப் ஹையஸ், மாணிக்கராஜ் மற்றும் பயிற்சியாளர் மகபுப் கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சாரண,சாரணியர்களின் குறிக்கோள் எப்பொழுதும் தயாராக இருத்தல் என்பதாகும். எனவே, சாரணர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படும்பொழுது அதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நல்லொழுக்கம், நன்னெறி உடையவர்களாக வாழ்தல் வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மக்களாக உருவாகி நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது .
முகாம் தேர்வாளர்கள் சாரண, சாரணியர்களை மதிப்பீடு செய்து அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தனர்.மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் நன்றி கூறினார்.அதன் பின்னர், முகாம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக சாரணர் இயக்கத்தின் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முகமிற்கான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக