தாராபுரம் அருகே விவசாயியின் நிலத்தை ஏமாற்றி கைப்பற்றியதால், மன உளைச்சலில் மதுவுடன் விஷம் கலந்து குடித்த விவசாயி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

தாராபுரம் அருகே விவசாயியின் நிலத்தை ஏமாற்றி கைப்பற்றியதால், மன உளைச்சலில் மதுவுடன் விஷம் கலந்து குடித்த விவசாயி!


தாராபுரம் அருகே விவசாயியின் நிலத்தை ஏமாற்றி கைப்பற்றியதால், மன உளைச்சலில் மதுவுடன் விஷம் கலந்து குடித்த விவசாயி!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலை!



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள மனக்கடவு பச்சாபாளையத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் சதீஷ்குமார், வயது 43, பச்சாபாளையம் கிராமத்தில் இரண்டு ஏக்கர் வளமான விவசாய நிலத்தை சொந்தமாக வைத்திருந்தார். குடும்பத்தின் மருத்துவச் செலவிற்காக, தனது நெருங்கிய நண்பர் செல்லமுத்து மற்றும் அவரின் அண்ணன் திருமணசாமி ஆகியோரிடம், ரூ.12 லட்சம் பெறுமதியான பத்திரத்தை அடமானம் வைத்து, தனது வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டார்.


இதற்கிடையில், சதீஷ்குமார் மதுபான பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறி, அவரை உறவினர்கள் குடி போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சதீஷ்குமாருக்கு, அடுத்தடுத்து நடந்த சம்பவம் வாழ்நாளையே உலுக்கியது.


தன் பக்கத்து தோட்டத்துக்காரர் ஒருவர், “ஏப்பா சதீஷ், நீ திருமணசாமிக்கு வித்துட்ட அந்த நிலத்தை, நான் ரூ.38 லட்சம் கொடுத்து வாங்கிட்டேன், இப்ப அது என்னோடது, நீ இங்க வரக் கூடாது,” என்று நேரடியாகச் சொல்லி மிரட்டினார். இதுவே சதீஷ்குமாருக்கு மின்னல் போல பட்டது. தன்னுடைய நிலம் போலி ஆவணங்களைக் கொண்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததும், அவர் மன உளைச்சலில் துடித்தார்.


இதனால் ஏற்கனவே பதற்றத்தில் இருந்த சதீஷ்குமாருக்கு, வீட்டிற்குச் சென்றவுடன் மனைவியும் குழந்தைகளும் கோபத்தில் தங்கள் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டனர். மன வேதனையில் துடித்த சதீஷ்குமார், திருமணசாமியை மீண்டும் சந்தித்து, “நான் வாங்கின பணத்தை வட்டியோடு திருப்பித் தருகிறேன், என் நிலத்தை மீண்டும் கொடு,” எனக் கேட்டார். அதற்கு திருமணசாமி, “டேய் குடிகாரா, நீ அன்னைக்கே என்கிட்ட வித்துட்ட, இப்ப ஏன் மறுபடியும் வந்து கேக்கிற, கேட்டா உன்னால ஒன்றும் புடுங்க முடியாது, நாங்க எல்லாம் முறைப்படி வக்கீலை வைத்து பத்திரப் பதிவு செய்து விட்டோம், எது இருந்தாலும் எங்களுக்கு அவர் பாத்துக்குவார்,” எனக் கடுமையாகக் கத்தி, மிரட்டினார்.


அதன் பிறகு தாராபுரம் எல்லைக்கு உட்பட்ட அலங்கியம் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் தெரிவித்ததாகவும் அதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர். ஆகியோர் இடத்தில் அவர்  புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை 


இதனால் மனமுடைந்த சதீஷ்குமார்.உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்த அவர், பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து, அந்த காட்சியை தன் செல்போனில் லைவாக வீடியோ எடுத்து, வாட்ஸ்அப் குழுவிலும் உறவினர்களுக்கும் அனுப்பினார். வீடியோவைக் கண்ட உறவினர்கள், அதிர்ச்சியுடன் விரைந்து சென்றபோது, சதீஷ்குமார் மயங்கி விழுந்திருந்ததை கண்டுபிடித்தனர்.


அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதல் நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உடல்நிலை மோசமடைந்ததால், திருப்பூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உயிருக்கு போராடி வருகிறார்.


சதீஷ்குமார் மதுவுடன் விஷம் கலந்து குடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad