பெருமகளூர் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த மதுபானக் கடை மூடப்பட்டதால், கடைவீதி வியாபாரம் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி, மீண்டும் மதுபானக் கடையை திறக்க வேண்டும் என முதன்மைக் கோரிக்கையாக வலியுறுத்தி வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, பெருமகளூர் பேரூராட்சி பகுதியில் அரசு மதுபானக்கடையை மீண்டும் திறக்க வேண்டும். காவல் நிலையம் அமைக்க வேண்டும். மீண்டும் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க வேண்டும். மின்சார வாரிய அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். பெருமகளூர் முதன்மைச் சாலையில் பேவர் ப்ளாக் அமைத்து தர வேண்டும். பேராவூரணியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்தை மீண்டும் பெருமகளூர் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருமகளூர் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் வர்த்தக சங்கத் தலைவர் அய்யப்பன் தலைமையிலும், செயலாளர் தண்டாயுதபாணி, பொருளாளர் ராமச்சந்திரன், கருப்பையா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், இப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி, காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அலாவுதீன், உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையேற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
பேராவூரணி நிருபர் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக