தாமிரபரணி ஆற்றில் 1 இலட்சம் பனை விதைகள் மற்றும் விதைப்பந்துகள், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 செப்டம்பர், 2025

தாமிரபரணி ஆற்றில் 1 இலட்சம் பனை விதைகள் மற்றும் விதைப்பந்துகள், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை  தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை அகற்றி முன்மாதிரியான தாமிரபரணி உருவாக்கும் நிகழ்ச்சியில், ஆற்றில் 1 இலட்சம் பனை விதைகள் மற்றும் விதைப்பந்துகள் விதைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் 
இன்று (06.09.2025) 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
ஆழ்வார்திருநகரியில் இன்றையதினம் நடைபெறுகின்ற முப்பெரும் விழாவிற்கு வருகை தந்திருக்கின்ற அனைவருக்கும் இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக, இந்தப் பகுதியில் உள்ள கருவேலமரங்களை எல்லாம் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டு, கிராம உதயம் அமைப்பு மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறது. 

அதற்காக பல்வேறு முயற்சிகள் பல நபர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீர்படுத்தும் இயந்திரம், இந்த இடத்தினை சமப்படுத்துவதற்கான பணிகள், தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகள், வணிக சங்கங்களின் மூலம் மரங்களை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் இந்த நிகழ்வின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்காக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மரக்கன்றுகளை வைத்து வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது அமைப்பு மட்டும் உதவி செய்யாமல் அனைவரும் சேர்ந்து இந்த நிகழ்வினை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற முன்னெடுப்புகள் ஆற்றை பாதுகாக்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கிறது. 

வெளியூரிலிருந்து வருகை தந்து ஒரு அமைப்பு சார்பாகவோ அல்லது ஒரு தனி நபரோ மரங்களை வளர்க்கும் பட்சத்தில் உள்ளுரிலிருக்கின்ற மக்களுக்கு அதன் அருமை புரியாமல் போய் விடும். 

எனவே, அதன் அருமை புரிந்து நாம் மரத்தை வைத்திருக்கின்றோம், மரத்தை வளர்ப்போம்;, நமது ஆறு மற்றும் நமது மரம், இதனை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நாம் பாதுகாப்போம். மேலும், ஆடு மாடுகள் மரத்தினை கடிக்காமல் அதற்கேற்றவாறு பாதுகாத்து தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும். 

இந்த முன்முயற்சியில் மக்கள் அனைவரையும் ஈடுபடுத்தி குறிப்பாக மாணவர்களை இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு ஈடுபடுத்தியமைக்காக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வடமாநிலங்களில் மழை பெய்து வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல் மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. 

இயற்கையை எப்போதும் நாம் நம்ப முடியாது. அவ்வாறு மேற்;கு தொடர்ச்சி மலை பகுதி மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் 2023 ல் ஏற்பட்ட வெள்ளத்தை காட்டிலும் அதிகமாக வரும். ஆகவே, ஆற்று படுகரையில் மரங்களை வைத்து பாதுகாத்து வளர்க்கும் பொழுது வெள்ளத்தின் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. அதேப்போல் இப்பகுதியில் 2023ல் ஏற்பட்ட பெருவெள்ளம் போல் ஏதேனும் ஏற்பட்டால்  இப்பகுதி மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும்  தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கராஜ், ஆழ்வாரி திருநகரியின் பேரூராட்சியின் தலைவர் சாரதா பொன் இசக்கி, கிராம உதயம் அமைப்பின் மேலாளர் வேல்முருகன், ஆழ்வாரி திருநகரியின் பேரூராட்சியின் துணைத்தலைவர் சுந்தர்ராசு, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயல் அலுவலர் காயத்திரி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ, அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad