முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த அக். 22ம்தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
விழா நாட்களில் கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் வைத்து பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்ட சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக