புதுக்கோட்டை, அக்டோபர் 12, 2025:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட பல இடங்களில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் “வாருங்கள் கற்றுக்கொள்வோம் – தீ பாதுகாப்பை அறிவோம், உயிர்களை காப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் மின்சார தீ விபத்துகள், எல்பிஜி சிலிண்டர் தீ விபத்துகள், வாகன தீ விபத்துகள், மேலும் மழை, வெள்ளம், இடி, மின்னல், பூகம்பம், நிலச்சரிவு, சுனாமி பேரலை போன்ற இயற்கை பேரிடர்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.
அதேபோல் பட்டாசு வெடி விபத்துகளைத் தவிர்க்கும் முறைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பொதுமக்கள் இப்பயிற்சியில் பங்கேற்று, பயனுள்ள தகவல்களை அறிந்ததாக தெரிவித்ததுடன், தீயணைப்பு வீரர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டினர். மேலும், இப்படிப்பட்ட பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக