அரியலூரில் மர்ம மரணம்: காவல் நிலைய புரோக்கர் மீது புகார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 நவம்பர், 2025

அரியலூரில் மர்ம மரணம்: காவல் நிலைய புரோக்கர் மீது புகார்.


அரியலூர், நவம்பர் 5:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்ற பெரியவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, கடந்த 17.10.2025 அன்று அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் மணிகண்டன், “பாண்டித்துரை அழைக்கிறார்” என்று கூறி மருதமுத்துவை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.


அதன்பின், பாண்டித்துரை “சுஜாதாவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டு மருதமுத்துவை தாக்கியதாகவும், தாக்குதலில் அவர் தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மணிகண்டனும் பாண்டித்துரையும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பின்னர் மருதமுத்துவை அருகிலுள்ள குடந்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருதமுத்துவின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு நடத்தப்பட்டு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பாக குவாகம் காவல் நிலைய போலீசார், மணிகண்டன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து, பாண்டித்துரையை விடுவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மருதமுத்துவின் மகன் செல்வராஜ், இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்ரமணியன் ஆச்சாரி அவர்களை நேரில் சந்தித்து, “பாண்டித்துரை கைது செய்யப்பட வேண்டும்” என்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.


இந்த பாண்டித்துரை, குவாகம் காவல் நிலையத்தில் புரோக்கராக (Broker) செயல்பட்டு வருபவர் என்றும், வழக்கை பாதிக்க முயற்சி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad