ஏரல் - தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மீட்டு தரக்கோரி நகையை இழந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 90 லட்சம் மதிப்பில் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நகையை அடமானம் வைத்தவர்கள், தங்களின் நகைகளை மீட்பதற்காக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு கடந்த மாதம் சென்றுள்ளனர்.
ஆனால் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சாத்தான்குளம் நாடார் தெருவை சேர்ந்த சுடலை முத்து மகன் சிவசுப்பிரமணியன் என்பவர் நகைகளை திருப்பி தருவதாக பல முறை கூறியும், திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால், நகைகளை இழந்தவர்கள் நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறந்த ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நிலையில் இன்று திடீரென நகைகளை இழந்தவர்கள் ஏரல் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரல் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக