தாராபுரத்தில் பெரும் பரபரப்பு – 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள்
இலவச வீட்டு மனை பட்டா கோரி அரசாணை ஆவணங்களை ஒப்படைத்து தர்ணா!
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் மற்றும் இந்து குடும்பங்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறார்கள். சொந்த வீடு இல்லை என்பதால் மாதந்தோறும் ₹5,000 முதல் ₹8,000 வரை வாடகை செலவு செய்து துன்புறுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
அலங்கியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், வீட்டில்லா மக்கள் இலவச வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பயனாளிகள், விண்ணப்பங்கள் சமர்ப்பித்தனர்.
பின்னர் 2024 ஆம் ஆண்டு தாராபுரம் வட்டாட்சியர் திரவியமிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்போது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் அழைக்கப்பட்டு பேசப்பட்டதுடன், அலங்கியம் பகுதியில் அரசு நிலம் இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியரும், வீட்டில்லா மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என உறுதியளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஒரு ஆண்டாகியும் பட்டா வழங்கப்படாததோடு, சில நாட்களுக்கு முன்பு மக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியபோதும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மேலும் அதிர்ச்சியாக, இலவச வீட்டுமனை வழங்கப்படும் என கூறப்பட்ட அதே நிலத்தில், ஒரு தனிநபர் தன்னைச் சார்ந்த நிலம் என கூறி உழுது விவசாய வேலை செய்து வருவதைக் கண்டதும் கிராம மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து இன்று, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டனர். தற்போதைய வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். மக்களிடமிருந்து அதிகாலையில் அதிகாரிகள் பெற்றிருந்த ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அட்டை, ஜாதி சான்று, வருவாய் சான்று உள்ளிட்ட அரசு ஆவணங்களையும் திருப்பி வழங்கினர்.
வட்டாட்சியர் ராமலிங்கம், அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் பொதுமக்கள்,
“50 ஆண்டுகளாக வாழும் எங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். ஒரு ஆண்டாகியும் பட்டா தரவில்லை. கடந்த ஆண்டு கொடுத்ததாக கூறிய பட்டா எங்களுக்கு கிடைக்கவே இல்லை” என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டு, சாலைமேல் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கடும் பதட்டம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக