கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன் பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்காக தன்னிடம் 15 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.ராஜன் பெயர் பரிசீலனையில் இருந்துள்ளது. இது தொடர்பாக தன்னை நியமிக்க பரிந்துரை செய்ய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மேலிடப் பார்வையாளர் (Observer) அணில் போஸ், தன்னிடம் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக ஆர்.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பணத்தை அணில் போஸின் நண்பர் ஒருவருடைய வங்கி கணக்கில் செலுத்துமாறு தனக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் விசுவாசத்துடன் பணியாற்றி வருகிறேன். பொதுமக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கான நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.
ஆனால் அணில் போஸ் போன்ற இடைத்தரகர்களாகச் செயல்படும் பார்வையாளர்களால், கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் தகுந்த பொறுப்புகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற ஊழல் செயல்பாடுகள் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படும் மேலிடப் பார்வையாளர் அணில் போஸ் மீது கட்சி ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குமரி மாவட்ட காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக