நெல்லை, செப்.5: திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் பார்வையிழந்த நிலையில் உள்ளதாகவும், இதில் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்துள்ளனர். கருவிழி பாதிப்பால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் கருவிழிகள் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக கண்தானத்தின் முக்கியத்துவம் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடக்க நிகழ்வாக ஆகஸ்ட் 25-ஆம் தேதி திருநெல்வேலியில் கண்தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட மாவட்ட நீதிபதியும், போக்சோ சட்ட சிறப்பு நீதிபதியுமான கே. சுரேஷ் குமார், மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி எஸ். கல்யாண மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய மருத்துவ சங்கம் – திருநெல்வேலி கிளைத் தலைவர் டாக்டர் எம். முகம்மது அபூபக்கர், காவேரி மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவ நிர்வாகத் தலைவர் டாக்டர் லட்சுமணன், பீஸ் ஹெல்த் மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவ இயக்குநர் டாக்டர் அன்புராஜன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்களிடையே கண்தானத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
மேலும், CSI பெல் பின்ஸ் இந்திராணி செல்லதுரை மிஷன் மருத்துவமனை, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி மாநகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும், இறந்தவர்களிடமிருந்து கருவிழியைப் பெறுவதற்கான மருத்துவ நடைமுறைகள் மற்றும் கண்தானம் தொடர்பான சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்புரையாற்றினார். மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டி. லயனல்ராஜ் சிறப்புரையாற்றினார். கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள், கண்தானத்தின் பயன்கள் மற்றும் அதன் அவசியம் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் சர்ஜன் லெப்டினன்ட் ஏ.ஆர். சைதன்யா, INS கட்டபொம்மன், தெற்கு விஜயநாராயணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்தானம் செய்த குடும்பத்தினருக்கும், கண்தானம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கண்தான இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை டாக்டர் அபினயா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கருவிழிப்பிரிவு மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி, மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். நிறைவில் டாக்டர் சுஜிதா நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக