திருநெல்வேலி, தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி தயாரித்துள்ளார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு ஆகியோர் குறும்படத்தை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறும்படத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர் குறும்படத்தின் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்தினர்.
அப்போது காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு பேசுகையில், இந்தக் குறும்படத்தை வெளியிடுவதற்கான முக்கியக் காரணம்,காவல்துறையினரின் ஒரு நாள் வாழ்க்கையை பொதுமக்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் மிகத் தத்ரூபமாக படமாக்கியிருப்பதே எனத் தெரிவித்தார்.
காவல்துறையினரின் பணியின் பின்னணியில் இருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களை இந்தக் குறும்படம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன்,அவர்கள் பேசுகையில், காவல்துறையினர் தங்களது பணியின்போது எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்களை பொதுமக்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை இந்தக் குறும்படம் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதாகக் கூறி படக்குழுவினரைப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், படக்குழுவைச் சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுபாஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர்கள் ராஜா மற்றும் மாரியப்பன், படக்குழுவைச் சேர்ந்த முத்துப்பட்டன் மற்றும் ஜோபின் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
காவல்துறையினரின் வாழ்க்கை, பணிச்சுமை மற்றும் பொதுமக்களுடனான அவர்களது உறவு ஆகியவற்றை உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் "அரச காவல்” குறும்படம் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக