உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இரண்டு சொகுசுப் பேருந்துகள் மோதல் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2026

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இரண்டு சொகுசுப் பேருந்துகள் மோதல் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசுப் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர். இதில் ஒருவரின் கால் விரல் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து ஆலங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புறவழிச்சாலையில் உள்ள தேநீர்க் கடை அருகே சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு சொகுசுப் பேருந்து திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த சொகுசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கால் விரல் துண்டிக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய பேருந்துகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து போலீசார் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, மாற்றுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, அதில் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இரவு நேரத்தில் இரண்டு சொகுசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தால் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

D. செல்வம் 
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 
தமிழக குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad