உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் உலா வந்த அபூர்வ வெள்ளை நிற ஆண் மயில். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2026

உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் உலா வந்த அபூர்வ வெள்ளை நிற ஆண் மயில்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, காட்டு நெமிலி வழியாக மங்கலம்பேட்டை செல்லும் சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில், சற்று முன்னர் அபூர்வ வெள்ளை நிற ஆண் மயில் ஒன்று பெண் மயிலுடன் ஜோடியாக உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலத்தில் இரை தேடி வந்த பெண் மயிலுடன், உடல் முழுவதும் தூய வெண்மை நிறத்தில் மின்னிய ஆண் மயிலும் வரப்புகளில் அச்சமின்றி சுற்றித் திரிந்தது. மேலும், வயல்வெளியில் கிடந்த தானியங்களை இரண்டும் சேர்ந்து உணவாக உட்கொண்டன.

பொதுவாக வண்ணமயமான தோகையுடன் காணப்படும் மயில்களில், முழுவதும் வெண்மை நிறத்தில் காணப்படும் மயில்கள் மிகவும் அரிதானவை என்பதால், இந்த வெள்ளை நிற ஆண் மயிலைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், விவசாய நிலங்களில் பணியாற்றிய பொதுமக்களும் இந்த அபூர்வக் காட்சியைக் கண்டு தங்களது செல்போன்களில் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

மரபணு மாற்றத்தால் ஏற்படும் நிறமாற்றத்தின் காரணமாக இத்தகைய வெள்ளை நிற மயில்கள் தோன்றுவதாகக் கூறப்படும் நிலையில், பெண் மயிலுடன் இணைந்து விவசாய நிலத்தில் சுதந்திரமாக உலா வந்த இந்த வெள்ளை நிற ஆண் மயில் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த அபூர்வ வெள்ளை மயிலின் காட்சிகள் தற்போது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

D. செல்வம் 
கள்ளக்குறிச்சி மாவட்ட 
செய்தியாளர் 
தமிழக குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad