கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மருதூரில், வள்ளலார் பிறந்த இல்லத்தில் அவரது 204-வது அவதார தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி அணையா தீபத்திலிருந்து பெறப்பட்ட தீப ஒளி, பழங்கள் மற்றும் சீர்வரிசைகளுடன் சன்மார்க்க அன்பர்கள் ஊர்வலமாக வந்து, கொடிமரத்திற்கு சந்தனம் பூசி, புதிய மஞ்சள்-வெள்ளை சன்மார்க்கக் கொடியை ஏற்றி வழிபாடுகளைத் தொடங்கினர்.
தொடர்ந்து, தொட்டிலில் குழந்தை வடிவில் வைக்கப்பட்டிருந்த வள்ளலாருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தாலாட்டுப் பாடல்கள் பாடப்பட்டன. மேலும், வள்ளலாரின் பெற்றோர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வள்ளலாரை வழிபட்டனர். விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
மருதூர் அவதார இல்லத்திற்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து வடலூர் சத்திய ஞான சபை மற்றும் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்திற்கும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்ற மகா மந்திரத்தை முழங்கியபடி, ஜீவகாருண்யத்தை உலகிற்கு உணர்த்திய மகானான வள்ளலாரின் அவதார நாளில் மருதூரில் திரண்டு வழிபாடு செய்வது பெரும் பாக்கியம் என சன்மார்க்க அன்பர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக