தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுடன் துணையாளர் ஒருவரையும் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் அக்டோபர் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டப் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், உளுந்தூர்பேட்டையிலும் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, சமூக நலத்துறை அமைச்சர் வெற்றிப் பயணத் திட்டத்தில் பெண்கள், திருநங்கைகளுடன் மாற்றுத்திறனாளிகளும் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்திருந்தார். ஆனால், அக்டோபர் 2-ஆம் தேதி இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்படாமல் விடுபட்டதாகச் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
அரசின் அறிவிப்பை நம்பி வெற்றிப் பயணப் பேருந்துகளில் ஏறிய மாற்றுத்திறனாளிகள், கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு இறக்கிவிடப்பட்டதாகவும், இதனால் பல்வேறு இடங்களில் பேருந்து நடத்துநர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் அறிவிப்புக்கும், திட்டத்தின் நடைமுறைச் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள முரண்பாட்டைக் கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுடன் துணையாளர் ஒருவரையும் கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியத் தலைவர் ஆர்.பாரத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் பி.வேலு, மாவட்டப் பொருளாளர் எஸ்.மீனாட்சி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வம், எஸ்.சிவலிங்கம், ஆர்.பழனிச்சாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கே.கொளஞ்சி, கே.சுதா, ஒன்றியச் செயலாளர் டி.மாயக்கிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் டி.கொளஞ்சி, ஒன்றிய இணைச் செயலாளர் கே.செல்வம், ஒன்றியப் பொருளாளர் பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை உடனடியாக இணைத்து, அவர்களுக்கான இலவசப் பயண உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக