கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை திட்டங்கள் குறித்த கையேடுகளை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின் மணி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.ஜோதிராமன் ஆகியோர் வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்ட திட்டங்கள் குறித்த புத்தகத்தினை பெற்றுக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்கவும், மக்காச்சோள விதை மானியத்தில் கொடுப்பதற்கு பதிலாக பின்னேற்பு மானியமாக வழங்கிடவும், உளுந்தூர்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கூடுதல் கட்டிடம் அமைத்து தந்திடவும், மண்பரிசோதனை ஆய்வகம் அமைத்து தந்திடவும்.
தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடவும், கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவையை 1 மாதம் காலம் நீட்டிக்கவும், மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு காய்வதை தடுக்க வேறு ஆலைக்கு மாற்றி கரும்பு அரவை செய்திடவும், கரும்பு முத்தரப்பு கூட்டம் நடத்திடவும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1 இலட்சம் வரை பயிர் கடன் தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்திடவும், கால்நடைகளுக்கு நோய் தாக்குதலுக்கு தடுப்பூசி போடவும்.
பாதூர் கிராமத்தில் வயல்வழிச்சாலை அமைத்து தந்திடவும், கொசப்பாடி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிடவும், சாத்தனூர் வலதுபுற கால்வாயை தூர்வாரிடவும், சங்கராபுரம் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடவும், சேஷசமுத்திரம், செங்காணம்கொல்லை, காடியார் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தந்திடவும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக