பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது – திருநெல்வேலியில் சௌமியா அன்புமணி பேட்டி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2026

பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது – திருநெல்வேலியில் சௌமியா அன்புமணி பேட்டி.

பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது – திருநெல்வேலியில் சௌமியா அன்புமணி பேட்டி

திருநெல்வேலி: பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கூட்டணியில் இல்லை என கூறுவது தவறான தகவல் என்றும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக பேசினார். ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், 

ஆனால் அந்த கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளாமல் தங்களது கட்சி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாகவும் கூறினார்.

இதன் காரணமாகவே இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். 

குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவான மக்கள் ஏராளமானோர் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தாமிரபரணியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது தொடர்பாகவும் சௌமியா அன்புமணி முக்கிய கருத்துகளை முன்வைத்தார். தமிழக அரசிடம் தாமிரபரணியை முழுமையாக சுத்தப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தென் தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரபரணியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரூ.59 கோடி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்

தாமிரபரணி கரையில் ரூ.59 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

ஜெர்மன் வங்கி உதவியுடன் கிடைக்கும் ரூ.59 கோடி நிதியை வெறும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தாமல், தாமிரபரணி கரையில் உள்ள பழமையான கல் மண்டபங்கள், படித்துறைகள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை சீரமைக்கவும், ஆற்றை பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை தற்போது மாசடைந்து காணப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த சௌமியா அன்புமணி, தாமிரபரணியின் தூய்மை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தாமிரபரணி வெறும் ஆறு அல்ல; தென் தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் பண்பாட்டு அடையாளம். அதை பாதுகாப்பது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad