இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் பெண் முதல்வர் ஜோசப் விஜய் நேரடி விசாரணை நடத்தி நீதி வழங்க கோரிக்கை.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தில், கருணை அடிப்படையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 100 நாள் வேலைத் திட்டப் பணித்தள பொறுப்பாளர் பணி, உள்ளூர் பிரமுகர்களின் தலையீட்டால் வேறு ஒருவருக்கு மாற்றி வழங்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
கானூர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மனைவி ஆரோக்கிய செல்வி. இவரது கணவர் துரைராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு எந்தவித வேலையும் செய்ய முடியாத நிலையில் வீட்டிலேயே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தின் முழு வாழ்வாதாரப் பொறுப்பும் ஆரோக்கிய செல்வியின் மீது விழுந்துள்ளது. ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவதற்குப் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தனது குடும்பத்தின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மணியிடம் ஆரோக்கிய செல்வி கருணை அடிப்படையில் வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்தப் பணி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் பிரமுகர்கள் சிலர் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்தித்து ஆரோக்கிய செல்விக்கு வேலை வழங்கக்கூடாது என வலியுறுத்தியதுடன், அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிகளைப் பதிவு செய்வதற்கான பொறுப்பும் உரிமையும் வழங்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பிரமுகர்களின் தலையீடு மற்றும் மிரட்டல் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட வேலை பறிக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு மாற்றி வழங்கப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருமானமின்றி தவிக்கும் நிலையில், இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக ஆரோக்கிய செல்வி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, தனக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணித்தள பொறுப்பாளர் பணியை மீண்டும் வழங்கி, தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கிய செல்வி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக