கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், பூமிதானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லும் வழியை மறித்து வேலி மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆண்டிமடம் செல்லும் சாலை அருகே பூமிதானம் வழங்கப்பட்ட இடம், அரசு பொது இடம், பட்டா நிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் பூமிதான நிலத்தைப் பயன்படுத்தி வரும் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, வழியை மறைத்து அமைக்கப்பட்ட வேலி மற்றும் கேட்டை அகற்றி, தங்களுக்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என மனு அளித்தனர்.
யார் தடுக்கிறார்கள் என்று வட்டாட்சியர் கேட்டபோது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான நிலத்தைப் பராமரித்து வருபவர்கள், தங்களை உள்ளே செல்லக் கூடாது எனத் தடுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். பட்டா நிலத்துக்கு உள்பகுதியிலேயே தங்கள் நிலங்கள் அமைந்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள பூமிதான மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த 1968-ஆம் ஆண்டு அரசால் பூமிதானமாக வழங்கப்பட்ட நிலத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு, விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வருவதாகவும், ஆனால் அங்கு செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், முதல்வரின் தனிப்பிரிவு, வட்டாட்சியர், கோட்டாட்சியர் என அனைவரிடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றும், அதிகாரிகள் முந்தைய திமுக ஆட்சியினருக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுத்து, தங்கள் நிலத்துக்குச் சென்று விவசாயம் செய்ய வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இதில் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், தீபாவளிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
செய்தியாளர்
ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக