விழுப்புரம், ஜூலை 30:
விழுப்புரம் மாவட்டம் முறுக்கேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட மருத்துவ அலட்சியம் மற்றும் தாமதமான சிகிச்சை காரணமாக, 2021 ஏப்ரல் 26ஆம் தேதி பிரசவமாக இருந்த சுப்புலட்சுமி என்பவரது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்தபோது அதிக ரத்தப்போக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையின் போது அவருக்கு கோவிட்-19 தொற்றும் ஏற்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு முன் பிரசவ அறை மற்றும் கட்டில்களை சுத்தம் செய்ய வேண்டும் என அவரது தாயார் தேவமணியை மருத்துவப் பணியாளர் ஒருவர் வற்புறுத்தியதால், பராமரிப்பில் தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதமே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, தேவமணி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த ஆணையம், சுகாதார பணியாளர் முத்துலட்சுமியே தாமதத்திற்கு நேரடியான காரணமாக இருந்ததைக் கண்டறிந்து, அவரை 2022 நவம்பர் 6ஆம் தேதி பணியிலிருந்து நீக்கியது. மருத்துவ அதிகாரி மற்றும் செவிலியர் மீதான புகாருக்கு நேரடி ஆதாரம் இல்லை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மருத்துவமனையில் உரிய நேரத்தில் மேல்சிகிச்சை வழங்க தவறுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் “வாழும் உரிமை மற்றும் நேர்மையான மருத்துவ சிகிச்சை பெறும் உரிமை” என்பதற்கு மீறல் என மனித உரிமைகள் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மகப்பேறு சேவைக்கு முன்னுரிமை அளிக்க, மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த, தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக