திண்டிவனம், ஜூலை 27 -
ஜூலை 26ஆம் தேதி, திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள வேதவள்ளி அம்மாள் அறக்கட்டளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மைய மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு.திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆகத்து 17 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரத்தில் “மதசார்பின்மை காப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருமாவளவன் அவர்களே சிறப்புரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த, போஸ்டர், பேனர், சுவர் விளம்பரங்கள் மற்றும் வாகன ஊர்வலங்கள் மூலம் மக்களை திரட்டும் பணிகளை அனைத்து முகாம்களும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை, கட்சியின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்காமல், பொது இடங்களில் நிர்வாக அனுமதியின்றி நிதி வசூல் செய்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்பது கட்சியின் ஒழுக்க விதிமீறலாகும் என்பதையும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட செயலாளருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டதாக கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது.
இந்தச் செயற்குழு கூட்டத்தில், நகர செயலாளர் பு.இமயன், ஒன்றிய நகர செயலாளர்கள் மகா வேந்தன், கு. கார்மேகம், கு. ரஞ்சித் குமார், தங்க ஜெயச்சந்திரன், கா. கிட்டு, பெ. சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
– செய்தியாளர் அருள்.சி, விழுப்புரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக