திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (27.10.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்று திரண்டு, தங்கள் பகுதியில் அமைக்கப்படவுள்ள அரசு மதுபானக் கடையைத் (TASMAC) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திடம் விரிவான மனு ஒன்றை அளித்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர மனுவின் மையக் கோரிக்கைகள்
பழவூர், CSI சார்ச், பெத்தேல் நகர், கிராமமங்கலம், உதயூர் அரவதி, பாப்பாங்குளம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
குடியிருப்புப் பாதிப்பு : மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது வீடுகளுக்கு மிக அருகில், சுமார் 150 மீட்டர் தொலைவில், அரசு மதுபானக் கடை அமையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகக் கட்டமைப்புகள்:மதுபானக் கடை அமையவிருக்கும் இடத்திற்கு மிக அருகில் கிறிஸ்த்தவ தேவாலயம், இந்துக்களின் குலதெய்வம் கோவில், தொடக்கப் பள்ளி, ஆதி திராவிடர் சுடுகாடு போன்ற முக்கிய இடங்கள் உள்ளன.
மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிப்பு: நக்கலூருக்குச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் மற்றும் புதன்கிழமை வாரச் சந்தை நடைபெறும் பகுதிக்கு மிக அருகில் இந்த மதுக்கடை அமையவிருக்கிறது. வாரச் சந்தை நடைபெறும் நாட்களில் மட்டும் சுமார் 900-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பெண்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாதகமான சூழல் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பச் சீரழிவு அபாயம்: மதுக்கடையின் வருகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், குடும்பங்கள் சீரழிவதற்கும் வாய்ப்புள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TASMAC விதிகள் மீறல்:குடியிருப்புப் பகுதி மற்றும் கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் மது விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு மதுபானக் கடைகள் விதிகள் 1983'-ன் கீழ் உள்ள விதியானது மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எழுச்சியான கண்டனம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழவூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த பளவூர் பகுதிப் பெண்கள், "பழவூரில் சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கிருக்கும் கிறிஸ்தவ சர்ச், பள்ளி, கோயில், அரசு கட்டிடங்கள் போன்ற இடங்களுக்கு மத்தியில் மக்கள் நடமாடும் வழியில் TASMAC கடை வரவிருக்கிறது. இது பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல குடும்பங்களைச் சீரழிக்கும். எனவே, டாஸ்மாக் விதிகளுக்கு முரணாக உள்ள இந்த கடையை எங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம், வேறு எங்காவது அமையுங்கள் என்று கோரிக்கை விடுக்கவே மனு கொடுக்க வந்துள்ளோம்" என வலியுறுத்தினர்.
எனவே, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குடியிருப்புப் பகுதி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் மதுக்கடை அமைவது சட்டவிரோதமானது மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த மதுபானக் கடையைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த இடத்தை நிரந்தரமாக ரத்து செய்யுமாறு பளவூர் பொதுமக்கள் சார்பாக மிகத் தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மாடசாமி திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக